தைப்பூசம்


        தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமான நாளாகக் கொள்கின்றோம்.

        தைப்பூசநன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது. சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை என்று கூறபடுகின்றது.அதாவது சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

        சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும்,அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட,வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம். இது வழிவழியாக இந்துக்கள் கைக்கொண்டுவரும் நம்பிக்கையின் வெளிப்பாடாக அமைகின்றது.

        இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது.அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் நாள் இந்நாள்.

        உலகிலேயே உயிரினங்கள் யாவற்றினதும் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மறைவிற்க்கும் இயற்கையே காரணியாக அமைகின்றது. இயற்கையை மீறி எதுவும் செயற்ப்படமுடியாது.அதாவது நம்பிக்கைக்கு மேலான சக்தியாகிய இறைசக்தியை மீறிச் செயற்படமுடியாது. பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் இயற்கையே விதியாக அமைகின்றது. இதை வலியுறுத்துவதும் இத்தைப்பூசநன்னாளின் ஒரு அம்சமாகும்.

     தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றது. இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது.
அத்துடன் வாயுபகவானும்,வர்ணபகவானும்,அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது.அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத்தைப் பூச நன்னாளாகும்.

        சிவனுக்குரிய சிறப்பு மிக்க நன்னாட்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் இத்தைப் பூச நன்னாளானது முருகப் பெருமானுக்குரிய விசேட நாளாகவும் விளங்குகின்றது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வாழ்க்கையை நம்பிக்கையுடன் சூரிய பகவானுக்குப் பொங்கலிட்டு வழிபட்டு எதிர்நோக்கும் நாம் தைப்புச நன்னாளிலே நம்மை வாட்டிவதைக்கும் துன்ப,துயரங்கள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நம்மை ஆட்டிவிக்கும் மாபெரும் சக்தியான சிவசக்தியை மனதிருத்தி பிரார்த்தனை செய்வதுடன் வாழ்விலே நலங்கள் சூழ,வாழ்வு சிறக்க வாழவழி கிட்ட வேண்டும் என்று விரதமிருந்து வேண்டுதல் செய்து தொழுகின்றோம்.

        இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும் இயலாதவர்கள் புண்ணிய நதிகளை நினைத்துப் போற்றி வழிபட்டு நீராடுதல் வேண்டும். வாழ்வில் ஒளியேற்றும் இத்தைப் பூசநன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது. ஏடு தொடக்கம், புதிர்எடுத்தல்,புதி துண்ணல்,பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல்,திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி. எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப்படைத்து,காத்து, அருளி,அழித்து,மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும். இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும்.எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச்செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...


தொகுப்பு- கி.குமரேசன்-