Banner       

இத்தாலி பியல்லா நகரில் நடைபெற்ற மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு அமைதிப் பேரணி

        இத்தாலி பியல்லா வாழ் தமிழ் மக்களால் 14-02-2009 சனிக்கிழமை மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு அமைதிப் பேரணி ஒன்று பியல்லா நகரின் மையப்பகுதியில் நடாத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு பியல்லா நகரின் முக்கிய வர்த்தக நிலையம் ஒன்றின் முன் திடலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி முதலில் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக தீக்குளித்த ஈழத்தமிழரான முருகதாஸிற்கு அனைவராலும் அஞ்சலி செலுத்தினர்.

        அதனைத் தொடர்ந்து சிறியோர், பெரியோர், வயதானோர் அனைவரும் மொழுகுவர்திகளை ஒரு கரத்திலும் மறுகரத்தில் எம் தாயக அவலங்களைச் சித்தரிக்கும் படங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு அமைதியான முறையில் அணிவகுத்துச் சென்றனர். இக்கவனயீர்ப்புப் பேரணி நகரின் மையப் பகுதியிலுள்ள பல வீதிகள் ஊடாக நகரை வலம் வந்து (சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து)  மீண்டும் பேரணி ஆரம்பித்த திடலை அடைந்தது. பேரணி நடைபெற்றபோது இத்தாலிய மக்கள் மிகவும் அவதானத்துடன் பார்வையிட்டனர். அப்போது எம் இளையோர்கள் தாயக அவலங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இப்பேரணிக்கு மாநகர, காவல் துறையினர் மிகவும் உறுதுணையாக இருந்து இப்பேரணி சிறப்புற உதவி புரிந்தனர்.  இதில் 200ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர். அமைதியான முறையிலே நடைபெற்ற இம்மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு அமைதிப் பேரணி மாலை 6 மணியளவில் நிறைவுபெற்றது.