
இத்தாலி றோம் நகரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்
வெள்ளிக்கிழமை (06.02.2009) காலை 10.00 மணியளவில் றோம் நகரில் இத்தாலி வெளிநாட்டு அமைச்சின் செயலகத்தின் தென் கிழக்காசிய நாடுகளின் விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரியுடனான சந்திப்பு ஒன்றை பலர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக் குழுச் செயற்பாட்டாளர்கள் நிகழ்த்தினர். இதன்போது எமது மக்களின் இன்றைய நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்து விளக்கினர். அதன்போது அவற்றை தாமும் நன்கு அவதானித்து வருவதாக சாதகமான முறையில் பதில் வழங்கினார். அதனை அடுத்து மதியம் 12.00 மணிக்கு பேரணியின் ஏற்பாட்டாளர்கள் இத்தாலிய நாடாளுமன்றத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமது கவனத்தைச் செலுத்திவரும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கஸ்தானியெத்தி உடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. (இவரை ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தாலி வருகை தந்தபோது சந்தித்து கலந்து உரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.) இதன்போது மக்களின் இன்றைய அவல நிலையை ஏனைய இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்து உரைக்கும்படி வேண்டிக்கொண்டனர்.
Piazza Farnese இல் பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைய அனைத்துப் பிரதேசங்களில் இருந்து மக்கள் பெருந்திரளாக முற்கூட்டியே வருகை தந்து நிகழ்வு குறிப்பிட்டபடி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. பொதுச் சுடரினை இத்தாலி பலெர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திருவாளர் வின்சன் இமானுவல் றஞ்சித் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்தவர்களுக்காகவும், இந்திய, சிங்கள படைகளாலும், இரண்டர்களாலும் படுகொலை செய்யப்பட்ட எம்மக்களுக்காகவும், நாட்டுப் பற்றாளர்களுக்காகவும் ஒரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்ப்ட்டது. அதனைத் தொடர்ந்து இன்றைய கவனயீர்ப்புப் போராட்டம் நிகழ்வதற்கான காரணம் இத்தாலி, தமிழ் மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டது.
தாய்தமிழகத்தைச் சேர்ந்த அருட்தந்தை கார்மேல் அடிகளார் இத்தாலிய மொழியில் எம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் உணர்ச்சி மிகு உரையை ஆற்றினார். தொடர்ந்து, இத்தாலி தமிழ் இளையோர்கள் தம் உணர்வுகளை தாய் மொழியிலும் இத்தாலிய மொழியிலும் எடுத்து விளக்கினர். நிகழ்வுகளுக்கு இடையிடையே இளையோர் தம் உணர்ச்சிக் கொந்தளிப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். கவனயீர்ப்பில் கலந்து கொண்ட உறவுகள் தாயகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூரங்களை வெளிப்படுத்தும் பதாதைகளையும் காட்சிப் படங்களையும் கரங்களில் தாங்கி நின்றனர்.
கொட்டும் மழையையும் வாட்டும் குளிரையும் பொருட்படுத்தாது தமது உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை நிகழ்வு நிறைவு பெறும் வரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிகழ்வை அறிந்து வருகை தந்த இத்தாலிய மக்களும், இத்தாலிய ஊடகவியலாளர்களும் ஆர்வத்துடன் எம் இளையோர்கள் ஊடாகக் கேட்டறிந்தனர். எமது தாயக விடுதலைப் போராட்டத்தை அறிந்து அதன் கள யதார்த்தத்தை உணர்ந்து கொள்வதற்காக எம் தாயகப் பிரதேசத்திற்கு நேரில் சென்று உண்மைத் தன்மையை அறிந்து எமது விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக ஒரு ஆய்வுக் கட்டுரையை இத்தாலிய மொழியில் வெளியிட்ட இத்தாலியப் பேராசிரியை கிறிஸ்ரினா தமது சிறப்புரையில் விடுதலைப் போராட்டம் ஒன்றிற்கு இப்படியான நிகழ்வுகள் முக்கியம் வாய்ந்தது என்று கூறியிருந்தார்.
இத்தாலி வாழ் தமிழ் மக்களிடமும், இத்தாலி நாட்டவர்களிடமும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் கோரிக்கை அடங்கிய மகஜரினையும் மாலை 5.00 மணிக்கு பேரணி ஏற்பாட்டாளர்களால் இத்தாலிய பாராளுமன்ற வெளிவிவகாரத்திற்கான செயலகத்தில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு நடைபெற்ற தினமானது ஒரு வேலை நாளாக இருந்த போதிலும் அதனையும் பொருட்படுத்தாது மிக நீண்ட தொலை தூரங்களிலிருந்து (800 கிலோ மீட்டர்களுக்கு மேல்) ஏறக்குறைய ஆயிரக்கணக்கான எம் உறவுகள் றோம், பலெர்மோ, நாப்போலி, கத்தானியா, லேச்சே, பொலோனியா, ரெஜ்ஜியோ எமிலியா, வெரோனா, மாந்தோவா, பேர்கமோ, மிலானோ, ஜெனோவா, பார்மா, ரொறினோ, பியெல்லா மற்றும் ஏனைய நகரங்களிலிருந்தும் சிறுவர்கள், பெரியோர்கள், வயதானோர்கள் என்று வகை தொகை இன்றி வருகை தந்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியாக
1. சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பு போரை இத்தாலி அரசு
தடுத்து நிறுத்த வேண்டும்.
2. தாக்குதல் நடாத்தப்படும் இடங்களுக்கு சர்வதேச பத்திரிகையாளர்களும் ஐ.நா உதவி அமைப்புக்களும் சென்று உண்மை நிலமையை அறிவதற்கு சிறீலங்கா அரசு அனுமதிக்க வேண்டும்.
3. விடுதலைப்புலிகளை தமிழ் மக்களுடைய ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும்.
4. தமிழ் மக்களுக்கு தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு உருவாவதற்கு இத்தாலிய அரசு உதவவேண்டும்.
ஆகிய பிரகடனங்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் கூறி உறுதியெடுத்துக் கொண்டதுடன் மாபெரும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 6.00 மணியளவில் நிறைவுபெற்றது.
|
|